


இலங்கையில் வடமேல் மாகாணத்தில் உள்ள புத்தளத்தை அண்டியுள்ள உடப்பு எனும் நெய்தல் கிராமத்தில் குடிகொண்டு அருள் பாலிக்கும் ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய பூமிதிப்பு எனப்படும் தீமிதிப்பு வைபவம் இன்று காலை இடம்பெற்றது.உடைப்பங்கரை என்பது உடைப்பு என்றாகி பின் அது மருவி உடப்பு என வந்தது எனக் கூறப்பட்ட இக் கிராம ஆலயத்தின் மூல மூர்த்தியாக ஸ்ரீ ருக்மணி சத்தியபாமா சமேத ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமான் வீற்றிருந்தாலும் அர்த்த மண்டபத்தில் திரௌபதி அம்மனுக்கே தீமிதிப்பு விழா எடுக்கப்படுகின்றது.
கடந்த மாதம் 27 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 18 தினங்கள் விழா நடத்தப்பட்டு இன்றைய இறுதி உற்சவத்துடன் முடிவுற்றது. மரபைத் தழுவி பாரதக் கதையையொட்டி நடத்தப்படும் இவ்விழாவில் நிகழும் நடிப்புக்கள் உணர்வுரீதியாக காணப்படும்.திரௌபதி அம்மனுக்கு முன்னாலிருக்கும் தூண்டாமணி விளக்கின் சுடரில் இருந்து அதிகாலையில் தீமிதிப்புக்கான மூலத்தீ எடுக்கப்பட்டு 20 அடி நீளமும் 15 அடி அகலமும் கொண்ட வெட்டப்பட்ட குழியினுள் நிரப்பிய புளியமர விறகுகளில் தீ வளர்க்கப்படும், பின் பிற்பகல் மூன்று மணியளவில் துரியோதனன் - வீமன் யுத்த பாரதக்கதை படிக்கப்பட்டு வீமனின் கதாயுதத்தால் கால் தொடையெலும்பு முறிந்து வீழ்ந்து கிடக்கும் துரியோதனிடம் சபதம் முடிக்கவென மகாவிஷ்னுவின் துணையுடன் திரௌபதை சென்று துரியோதனனின் மார்பைப் பிளந்து அதில் வரும் குருதியை திரௌபதையாக பாவனை செய்யும் ஆலய பூசகர் தனது தலையில் பூசி சபதத்தை முடிக்கும் "பழுகளம்" எனும் காட்சி தத்துரூபமாக வருடா வருடம் நினைவூரப்பட்டு வருகின்றது.

No comments:
Post a Comment